Monday, December 29, 2014

நட்பினை நயந்தே...

2014-ன் இசைவிழாவில் என்னளவில் இரு முக்கிய நிகழ்வுகளாக நான் கருதுவதைப் பகிர்ந்துகொள்கிறேன். இரு மாதங்களுக்கு முன்னால் என் குருநாதர் ஸ்ரீ சிவராமன் சார் அழைத்தார்.

‘நாகராஜா.. மூணு முக்கியமான விஷயம் சொல்றேன், செய். மதுரை மணி ஐயர்வாள் இங்கிலிஷ் நோட் பாடுவாரோன்னோ.. அதுக்கு ஸாஹித்யம் இருந்தா பாடலாம், அபிநயிக்கலாம்னு தோணித்து. நீ எழுது’.

ஸரி ஸார்.

‘அதே மாதிரி, ஆச்சார்யாள் எழுதிருக்காளோன்னோ.. மைத்ரீம் பஜத... ஒலகத்துக்குத் தேவையான அமைதிக்கு உண்டான அர்த்தங்கள் உள்ள பாட்டு அது. ஸம்ஸ்க்ருதத்துல இருக்கு. அதையும் தமிழ்ல எழுது’.

ஸரி ஸார்.

’ஸ்ரீநிவாஸ் மேல எப்பவும் எனக்கு ஒரு ப்ரியம் உண்டு, ஒனக்குத் தெரியுமே’

ஆமாம் ஸார்.

'இந்த டிசம்பர்ல நாரத கான சபால  I will be presenting a concert dedicated to the memory of Srinivas. அதனால், கடினமான வார்த்தைகள் இல்லாம எளிமையான தமிழ்ல,
அதாவது, கொஞ்சம் மணிப்ரவாளமா இருக்குமே அது மாதிரி, நடுநடுல ஸம்ஸ்க்ருதம் இங்லிஷ் எல்லாம் கூடவரணும். அந்த மாதிரி,  ஒண்ணு எழுது’

ஸரி ஸார்.

இந்த டிசம்பர் 18 அன்று ஸ்ரீ க்ருஷ்ண கான சபாவில் Soul Speaks என்ற நிகழ்ச்சியில் சிவராமன் சாரின் வாசிப்பில் தேர்ந்த நடனமணிகளான ரோஜா கண்ணனும் ப்ரியா முரளியும் ஆட, ஜி.ஸ்ரீகாந்த் பாட்டுடன், கண்டதேவி விஜயராகவன் வயலின் அனந்தா ஆர். க்ருஷ்ணன் தப்லாவுடன் முதலிரண்டும் அரங்கேறியது.

நேற்று நாரத கான சபாவில் மேண்டலின் ஸ்ரீநிவாஸ் நினைவாக ஒரு கச்சேரி. அதில் வாசிக்கப்பட்ட கவிதை.  மரபுக் கவிதையில் தேர்ச்சிபெற்ற என் நண்பர்களும் சீரியஸ் இலக்கிய புதுக்கவிதையாளர்களும் மன்னிக்க).
---------------------------------------------------





             

மங்கலம் பிறந்தது சுந்தரத் தெலுங்கினில் – அது
மேண்டலின் ஆனது செந்தமிழ் நாட்டினில் – ஸ்ரீயெனும்

மங்கலம் பிறந்தது சுந்தரத் தெலுங்கினில் – அது
மேண்டலின் ஆனது செந்தமிழ் நாட்டினில்
மேடொன்றில் விழுநீராய் இசை பெருக்கெடுத்தது
மேதைகள் மகிழ்ந்தனர்; மேதினியும் நிறைந்தது.

’தவ நாம: கிம்’ என்று தமை யாரும் கேட்டவுடன்
தமக்கிட்ட பெயரெதையும் தந்திடவே தேவையில்லை
தன் மடியில் தானிருக்கும் பெருமிதமாம் வாத்யத்தின்
பேருரைக்கப் புரிந்துவிடும் பேறுபெற்றாய் ஸ்ரீநிவாசா

பாலகனாய் வந்திங்கு பரவசங்கள் ’தந்திட்டாய்’
பாமரர் பண்டிதரின் உளமெங்கும் நிறைந்திட்டாய்
இதழ்களில் மலர்போல இன்முகமாய்ப் புன்னகைத்து
ஈடில்லா சங்கதியையும் ஈஸியாய் ப்ரசண்ட் செய்தாய்

ஸூர்யகரா ஸர்வகதா 
என்பது போல் சுகந்தமாய்
தேனிசை தவழவிட்டு, சுநாதமாய் ரீங்கரித்தாய்
கண்ணிமை மூடி உன் கற்பனையில் கிறங்கவைத்து
கீதமெனும் வானகத்தில் காற்றினில்நீ கரைந்துவிட்டாய் – ஸங்
கீதமெனும் வானகத்தில் காற்றினில்நீ கரைந்துவிட்டாய்

சின்னச்சின்னக் கோர்வைகளால் சிந்தனைக்குள் தேங்கிவிட்டாய் – நீ
சிந்திச்சென்ற கார்வைகளுக்கு எம் மனத்தை ஏங்கவிட்டாய்
Senior வித்வான்கள் முதல் Sincere ரஸிகர்கள் வரை
சிறிதும் எதிர்பாராமல் சிரித்தபடி தூங்கிவிட்டாய்.

’லவ் யூ’
என்றுனை லக்ஷம்முறை சொல்லியும் – ஸ்வீட்
லஸ்ஸியே உன்னிசை நிரம்பியும் போதவில்லை –
I
Miss you
என்று நாங்கள் பிரிவுணர்ந்து சொல்கையில் – How
I wish, You be here too to cheer us, my dear.

We love you Srinivas…



----------------------------------------------------------------------


* தவ நாம: கிம்? உன் பெயர் என்ன.

सूर्यकरा स्सर्वगता - ஸூர்யகரா ஸர்வகதா சூரியனின் கிரணங்கள் எங்கும்  செல்லும் என்பது போல

* தந்திட்டாய் - string instrument played with that ease of handling a toy


------------------------------------------------------------------------


ஐக்கிய நாடுகள் சபையில் ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பாடுவதற்காக ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாள் அருளிய ‘மைத்ரீம் பஜத’ -வின்  தமிழ்ப் பாடல் இங்கே: https://soundcloud.com/erode14/maithrim-bhajatha
------------------------------------------------------------------------
             

மைத்ரீம் பஜத!

நட்பினை நயந்தே நானிலம் வெல்வோம்
நமைப்போல் எவரையும் நினைந்தே வாழ்வோம்
பகைமையைத் தவிர்ப்போம் போரினை மறுப்போம்
பிறருடைமை பறிக்கும் பிழைதனைப் புரியோம்
                                       (நட்பினை நயந்தே)

காப்பாள் பூமகள் காமதேனு போலே - நம்
தந்தையோ தவசிவன் தயைதரு மூலன்
ஈகையும் கருணையும் பணிவு்ம் பயின்றே
அனைவரும் உயர்ந்தே ஆனந்தம் கொள்வோம்

------------------------------------------------------------------------


ஹரிகேசநல்லூர் ஸ்ரீ முத்தையா பாகவதர் இயற்றி, மதுரை ஸ்ரீ மணி ஐயர் அவர்களால் ப்ரபலமடைந்த இங்லிஷ் நோட்டுக்கான ஸாஹித்யம் அடுத்த பதிவில் அப்லோட் செய்கிறேன்.