Sunday, July 21, 2013

தேநீர்.




விளிம்புகள் தொட்டதும் ரணமாகும் உதடுகளால்
புறக்கணிப்பின் ஆற்றவொண்ணா வலிகள்
நிரம்பிய கோப்பையை
நிதானமாய்ப் பருகுகிறேன்.

கண்களால் அளந்தோ
கனத்தால் கணித்தோ
கரண்டி  ஒன்றின் காம்பினாலோ
ஆழமறிய முற்படுகையில்

இரண்டு மிடறுகளுக்கிடையேயான 
இடைவெளிகளில் எல்லாம்
நாசிக்குள் நுழைந்து
நெருப்பாகிறது அமில மணம்.

ஆற்றிக்கொள்ளவென அடியில் தட்டோ
அகன்றதொரு பாத்திரமோ
அருகில் இல்லை; அமிலத்தின் கரைப்பில் 
குளிரென்ன சூடென்ன.

அருந்தாதே வேண்டாமென அனுபவங்கள் அடித்துக்கொள்ள
அவ்வளவுதான் ஆயிற்றென்று அமுதமாய் மனம் மயக்க
புத்தியின் அடிக்குரலை இடக்கையால் புறந்தள்ளி 
கோப்பையின் பிடியை இன்னமும் இறுக்கி 
விரல் கடுக்க ஏந்தியபடி
வீம்பாய் அருந்துகிறேன்

வலிகளும் ரணங்களும் வாழ்ந்துகொண்டேயிருக்க
பிழைக்கவென்றே சாகவோ
சாகவென்றே பிழைப்பதோ
செய்தபடி.



1 comment:

  1. குறைஞ்ச பக்ஷமா உங்க தேநீர்க் கிண்ணத்தில் பிடியாவது இருந்ததே. இப்போல்லாம் அந்தச் சின்ன ப்ளாஸ்டிக் டிஸ்போசபில் கப்பில் வழிய வழியக் கொடுக்கையில் எரிச்சலே வரும். ஹிஹிஹி, நாங்க எங்கே போனாலும் தம்ளர் எடுத்துட்டுப் போயிடுவோம்.

    அது சரி, வலிகளையும், ரணங்களையும் குறிப்பிட மட்டுமா இந்தக் கவிதை?? வேறே உட்பொருள் இருக்கு போலிருக்கு. என்னனு யோசிக்கிறேன். :)))))

    ReplyDelete