Monday, February 25, 2013

வித்யாவின் மரணமும் வலித்தது


பள்ளிச் சீருடையில் பாவாடைக்கும் காலுறைக்கும்
இடைவெளி ஈர்த்ததென இளித்தபடி காதல் சொல்லு

காதலை மறுத்ததும் காதகனாய்க் கருவறுக்க
சாதலை தண்டனையாய்த் தரவென்று முனைந்து
முகமற்றுத் திரியட்டுமென முதுகிலோ முன்போ
தீராத வடுவாய்த் திராவகம் வீசு.

பேருந்தில் செல்கையில் பேச்சுக் கொடுத்தபடி
ப்ளேடுகளை மென்று முகத்தில் துப்பு

மின்சார ரயிலில் அருகிலே நின்றபடி
மார்பகத்தின் பிளவில் தேளொன்றைப் போடு

அலுவலகம் விட்டு அசதியாய்த் திரும்புகையில்
மாஞ்சாக் கயிற்றால் கழுத்தை அறு

பார்த்ததும் படுத்து கால்களை அகட்டாதவளின்
பாவாடைக்குள் பட்டாசுகளைப் போடு

காதலர் தினமென்று காதணியும் வளையலும்
வாழ்த்துமடல்களும் வாடாத பூக்களும் 
வாங்கிய கணக்குகள் கூட வணிகத்தில் தெரிந்துவிடும்

சிகரெட்டில் சுட்டுத் தீய்த்த பால் குடித்த காம்புகள்
புழைக்குள்ளே நுழைந்து புணர்ந்திட்ட கடப்பாறைகள்
கெமிஸ்ட்ரி சரியில்லையெனக் கொண்டுவரும் அமிலங்கள்
தெரியுமா அவள் ஒரு லோலாயி எனப் பரப்பும் கதைகளின்

அறியப்படாத கணக்குகளை
சொல்லப்படாத வன்புணர்வுகளை
எந்த வணிகம் தொகுத்துப் போடும்
எவ்வூடகம் நிறுத்திச் சொல்லும்

திராவகம் எரித்திட்ட எலும்புகளின் முனைகளால்
கொதித்தே வெந்த சதைக்குள் தொற்றுகளால்

மரணத்தைத் தழுவுகின்ற ரணமான நொடிக்கு முன்
வன்புணர்ந்த ஆண்குறியொன்று எறும்புப் புற்றிலோ
எலிவளையொன்றிலோ நுழைக்கப்பட்டு 
கட்டிப்போட்டதாய் கனவொன்று வரும்...

உறக்கத்தில் ஓரமாய்ச் சிரித்தபடி
நாடொன்றை எரித்தவளின் நகரத்தில் 
தானேயெரிந்தபடி தேசத்தைச் சபித்தபடி
செத்தே தொலைவேன்
செய்வதென்ன இங்கு.

Photo courtesy: Internet