Tuesday, August 14, 2012

என்ன லேங்க்வேஜுய்யா இது...


நான் தமிழை ஐயம் திரிபறக் கற்றவனில்லை. தமிழ் மீது தாய்மொழி என்ற மரியாதையும் பற்றும் உண்டு. சீர், அசை எல்லாம் கூடத் தெரியாது. சமீபத்தில் முயன்று, ஆனால், அதன் பிறகு கச்சேரிகள், பயிற்றுவித்தல் என திடீரென முனைப்பாக நேர்ந்ததால் அதுவும் இடையில் நின்றுபோனது :(

தமிழ் எழுத்துகளை வைத்துக்கொண்டு இந்தியாவின் ஏனைய மொழிகள் போல் உச்சரிப்பு வித்யாசங்களை அறிந்துகொள்ள முடியவில்லை. நாலு கா, சா, டா, தா, பா இல்லாமல் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது என தமிழ்மொழி குறித்த தாழ்வு மனப்பான்மை அல்லது கவலையினால் துன்புறும் வாசகங்களை அவ்வப்போது கேட்க நேர்கிறது.

இவை பற்றி எனக்கு உள்ள கருத்துகளை எழுதிப்பார்த்தேன்.


1. பாருக்குள்ளே நல்ல நாடு என்று படிப்பதா, Bar-க்குள்ளே என்று பாடி மகிழ்வதா என்ற வினா எழும்புவது இயற்கையே.

thOtutai-ய சிவனா? thOdudaiya சிவனா? thOdutai? dhOdudai என்றெல்லாம் ’அகும்பதம்-அன்பு இதம்’ போட்டுப் பார்ப்பது கிண்டலுக்குத் தான் உதவும்.

தமிழில் வல்லினம் என்ற சொல்லின் பொருளை நான் வலிமை, பலம், சக்தி என்று பார்க்கிறேன். 100 கிலோ எடையைத் தூக்கும் அதே கரங்கள் தான் மலரையும் மழலையையும் ஏந்துகின்றன. எனவே, வல்லினம் என்பது எடைக்குத் தகுந்தாற்போல், நிறைக்குத் தகுந்தாற்போல் வரக்கூடிய ஒலி. காகம், பண்பு, தந்தை என்று அதில்  புரிந்துகொள்ளக்கூடிய பொதுத்தன்மையும் இருக்கும்.

எனவே, வல்லினம் என்பது இடத்தைப் பொருத்தது என்றறிக. Bar-the-fun அல்ல; pArththiban என்று common sense, பிற மொழியறிவு, பழக்கம், கற்றல் என்று பல காரணங்களால் புரிந்துகொள்ளப் படுவது.  பல வேடங்களில் பார்த்துப் பழகிவிட்டதால் ஒரு நடிகனை இமேஜ் வட்டங்களின்றி எளிதாக எடுத்துக்கொள்ளுதல் போல.  மனைவிக்குக் கூட கணவன் மேல் திகைப்பு ஏற்பட்லாம்; ஆனால் அப்பா தரும் ஆச்சிரியங்களை ஒரு குழந்தை திகைப்புகள் ஏதுமின்றி, மகிழ்ச்சி மட்டுமே கொண்டு ஏற்றல் போல. முதலிலிருந்தே பழகிவிடும்.

ஆங்கிலத்தின் G என்ற எழுத்து (god, gill, good) ga gA, gi gee, gu goo(gle) என்றும் அதே எழுத்து ஜி, ஜா என geography, gentle என்றும் வருவதைப் புரிந்துகொள்கிறோம்; But-பட், put-புட் என்றால் புரிந்துகொள்கிறோம். But, தமிழ் மட்டும் என்ன பாவம் செய்தது? ஒரே அலைபேசிக் கருவிக்குள் இன்று Diary, Organiser, Gamer, TV, FM, Internet, Media etc. அனைத்தும் இருப்பதை தொழில்நுட்ப வளர்ச்சி என்றால், ஒரே எழுத்தை நான்கு விதமாய் இடத்திற்கேற்றவாறு உச்சரித்தல் வளர்ச்சி தானே?

இணையம், பதிவு, வலைப்பூ, அலைபேசி எல்லாம் இல்லாத காலத்திலேயே நான் இக்கருத்துகளையெல்லாம் பேராசிரியர் நன்னனிடம் சொன்னேன். அவர் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. (அப்போது கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் இருந்தார்) :)

2. Pre-KG, Creche எல்லாம் வருவதற்கு முன், ஐந்து வயதிலிருந்து பதின் பருவம் வரை நாமெல்லாம் குழந்தைகளாகவே இருந்த வரை, இக்குழப்பங்கள் இந்த அளவிற்கு இல்லை என்று எண்ணுகிறேன். ‘நேத்திக்கு நாங்கெல்லாம் ஊருக்குப் போவோமே’ என்று சொல்கிற அதே குழந்தை அடுத்த மாதமே இலக்கணம் தெரிந்துகொள்வதைப் போல, மொழியறிதலின் சுகம் எங்களுக்கெல்லாம் இருந்ததோ எனத் தோன்றுகிறது. அனுபவ அறிவு, கேட்டலில் விளைவது என்னுமாப்போலே லக்ஷிய ஞானம் வந்த பின்னரே இலக்கணம், வரையறைகள் அறிந்த லக்ஷண ஞானம். அப்படிக் கைவரும் அறிவே இயல்பானது என்றும், தங்குவது என்றும் நம்புகிறேன்.

3. தமிழில் 247 எழுத்துகள் என்று பள்ளிக் குழந்தைகளை Gange Rape (சொல்லாடலுக்கு மன்னிக்கவும்) செய்யும் வன்முறையின் நுகபிநி என்ன என்று விளங்குவதேயில்லை. உயிர்-மெய்-உயிர்மெய், சில சிறப்பெழுத்துகள் தவிர மற்றவை குறியீடுகள் தான். அவற்றையும் எண்ணிக்கையில் வைத்து, ஊதிப் பெரிதாக்கி ஆத்தாடீ.. இம்புட்டு input-ஆ எனத் திகைப்படைய வைத்தலைத் தவிர்த்தல் நலம்; மொழிக்கும்-குழந்தைகளுக்கும்.

4.

5.

(நிரப்பப்படாத எண்களின் வரிசை நமக்குத் தான், இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, வாசிக்க, எண்ணிப்பார்க்க பலவும் பிடிபடும். எண்களுக்கும், எண்ணங்களுக்கும் ஏதய்யா முற்றுப்புள்ளி?)