Monday, August 1, 2011

மௌனம்

பாதங்கள் வலிக்காமல்
பாதைகள் கடந்த பின்னும்

கண்கள் மட்டும் மறக்கவில்லை
மிதிக்காதபோதும், 
முள்வலியை.   

********************************************************* 


பார்வைகள் பனியானால்
மழையாய்க் குளிர்ந்திருப்பேன்


காத்திருத்தல் கவிதைகளானால்
மொழியாய் இசைந்திருப்பேன்


முத்தங்கள் நீரானால்
கங்கையாய்க் கடலாயிருப்பேன்


தழுவுதல் இலைகளானால்
பூக்களாய் தருவாயிருப்பேன்


மௌனமே நீயானால்
என்னவாயிருப்பதடி...


யாரிடமேனும் சொல்.
*********************************************************  


அன்று...


எனக்கு வேண்டியிருந்தது,
உனக்கு மனமில்லை.


ஒரு நாள்
உனக்குத் தோன்றியிருக்கும்;
உன் மௌனம் என்னை எட்டவில்லை.


எனினும்,
நமக்கு வேண்டியிருக்கும்போது
சந்திக்காமலேயே நகர்ந்து விடுவது


நாட்களா -
நாமா?
*********************************************************  


நான் - நானாகவும்
நீ - நீயாகவும் இருந்திருக்கலாம்.


நானும் நீயும், நீயும்-நானுமாய்
உதடுகள் திறந்து, உள்ளே தேடி,


நாக்குச் சுவைத்து,
நம்மை அறிந்தும்...


நாளும் பிணங்கி நாளையே சேர்வதும்
எத்தனை தின்றும் தீர்ந்திடாதிருப்பதுமாய்


சுயமற்றுப் போன பின்பு
யாரிடம் காட்டுவது...


நெஞ்சைக் கிழித்து.

*********************************************************  


SMS ஏதும் இல்லை

MAIL BOX ன் மற்றவைகள்
தேடத்தான் வைத்தன...

ஒலிக்காத போதும் அடிக்கடி
பார்த்துக்கொண்டேன் கைபேசியை.

வார்த்தைகளை விடப்
பெரியதுதான் மௌனம்,

நாமிருவரும்...
சேர்ந்திருக்கும்போது மட்டும்.

*********************************************************   

மனமற்றுப் போனால் -
நினைவற்றுப் போகும் ;

நினைவற்றுப் போனால் -
பேச்சற்றுப் போகும்,

பேச்சற்றுப் போன பின்பும்
பேசிக்கொள்வோம்

நானும் நீயும்...

எங்கோ இருந்தபடி இரு(ற)க்கும் வரை
ஸ்வாசம் போல.


************************************************************ 


அந்த இடைவெளி
அப்படியேதான் இருக்கிறது.

நீ வார்த்தைகளிடையே
அமர்ந்தபோது,
நான்
மௌனத்தில் சஞ்சரித்தேன்.

நீயும் மௌனமான போது
உடல் மொழியை உணர்ந்தேன்.

பேச்சு - இரைச்சல்;
ஸ்பரிசமே சங்கீதம்.

அதற்கப்பால் ஒரு மௌனம்
இருக்கக்கூடும். ..

திரியின் நீளம் தீரும் வரை ,
பற்ற வைப்போம் -

அணைப்போம், பற்றும்போதே
வெடிக்கும் ஒருநாள்...

அதுவரை.

***************************************************************

பாராதபோதும்,

நினைவுகள் நிறைக்கும்...

உண்மைதான் - உன்

உணர்வுகளின் ஓரங்களில்

வரியாய் ஓடிடும்

எனக்குள்ளே அழைத்திட்ட

நிசப்தக் குரலின்

நீண்டிடும் விளிம்புகள்.

****************************************************************

என் குரல் எனக்கே கேட்டதை
உள் மன விழிப்பென்றே எண்ணியிருந்தேன்.

பாதி இருக்கை மட்டும்
பள்ளமான பைக்,

எப்போது வாங்கினாய் என்று
எண்ண வைக்காத கொடி,

குறுக்கிலே படுத்தாலும் - வெளியே
கால் தெரியாத கட்டில்,

உபயோகப்படுத்தாத மாற்றுச் சாவி...

அஹ விழிப்பு அல்லடி அது,

பூட்டியே கிடக்கின்றதொரு
எதிர் வீட்டின் கதவைப் போல...

தொடர்பற்றுப் போனாலும் - தொடர்ந்தபடி கழிகின்ற
மற்றுமொரு நாளின்

தனிமை.


***********************************************************************

2 comments: